அதிர்ச்சி தரும் மக்கள் சர்வே..!!!!




தமிழக அரசியலிலும் இப்போது சூடு கிளப்பிக் கொண்டிருப்பது இலங்கைப் பிரச்னைதான். இலங்கையில் வாழும் தமிழர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பதால், ஈழத்தில் எழும் அவலக் குரல்களின் அலறல் சப்தம், தமிழகத்தில் எதிரொலிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.

ஆனால், நமது உண்ணாவிரதங்களும், அரசியல் லாவணிகளும் இலங்கைவாழ் தமிழர்களின் அழுகையை நிறுத்திவிடுமா? தனித் தமிழ் ஈழம்தான் அவர்களுக்கான ஒரே தீர்வு என்றும், அந்தத் தனி ஈழத்திற்காகப் போராடும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இல்லையில்லை... விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்-நமது ராஜிவ்காந்தியைக் கொன்ற அவர்களை மன்னிக்கவே முடியாது என்பது மட்டுமல்ல; அவர்களை இங்கே ஆதரித்துப் பேசுபவர்களையும் நாம் மன்னிக்கக் கூடாது_சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள்கூட, இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட்டு அமைதி திரும்புவதையே தாங்கள் விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

இப்படிப் பலரும் பலவிதமாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையில் இந்த நாட்டின் எஜமானர்களான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்பினோம். அதற்காக நான்கு கேள்விகளைத் தயார் செய்தோம். சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலுள்ள நமது நிருபர்கள் கேள்வித்தாள்களுடன் களத்தில் இறங்கினர். ஆண்கள், பெண்கள் என்று மொத்தம் 1,833 பேரிடம் கருத்துக் கேட்டனர்.

நமது நிருபர்கள் கேள்வித்தாளை நீட்டியதுமே அதைப் படித்துப் பார்த்த சிலர், "இங்கே காய்கறி வாங்கவே வக்கில்லை. அந்தளவுக்கு எல்லா காய்கறிகளும் கிலோ ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் என்று விற்கிறது. வாழைப் பூ விலைகூட வானத்தில் ஏறிச் சிரிக்கிறது. இதைக் குறைக்க ஏதாவது சர்வே எடுத்துப் போடக் கூடாதா?'' என்றுதான் கோபமாகக் கூறினார்கள். சிலர் மின்வெட்டைக் கூறி எகிறினார்கள்.

இதையெல்லாம் சமாளித்துத்தான் நமது நிருபர்கள் இந்த சர்வேயை எடுத்திருக்கிறார்கள்.

மொத்தம் நான்கே கேள்விகள்:

1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா?

2. ராஜிவ்காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

3. இலங்கைப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு சரியா? தவறா?

4. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு சரியாக சரியாக நடந்து கொள்கிறதா? பாரபட்சம் காட்டுகிறதா?

இந்தக் கேள்விகளில் ராஜிவ்காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? என்பதற்கு மட்டும் மிக அதிகம் பேர், `சோனியாகாந்தி மன்னித்துவிட்டாலும்கூட எங்களால் அதை மன்னிக்கவே முடியாது!' என்று அடித்துக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள்கூட, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை இங்கே ஆதரித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதுதான் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும், கல்லூரிப் பருவத்தினரிடையே புலித் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகிறார் என்பதும் உண்மை.

அடுத்ததாக, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு என்பது நமது முதல்வர் கலைஞருக்கு வேண்டுமானால் திருப்தியளிக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவே கூறியுள்ளார்கள்.

அதேபோல், இலங்கைப் பிரச்னையில் முதல்வர் கலைஞரின் செயல்பாடும் சரியில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. அவர்களின் கருத்தைத்தான் மேலேயுள்ள அட்டவணையில் துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.


 

0 comments: